சூரக்குளத்தில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2021 03:09
சிவகங்கை : சிவகங்கை அருகே சூரக்குளத்தில் 745 ஆண்டு பழமையான பாண்டியர் கால கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசனேரி கீழமேட்டைச்சேர்ந்த சரவணன் என்பவர் சூரக்குளம் பகுதியில் கல்வெட்டு இருப்பதாக சிவகங்கை தொல்நடைக்குழுவிற்கு தகவல் தெரிவித்தார். தொல்நடைக்குழு நிறுவனர் கா.காளிராஜா மற்றும் பிரபாகரன் அப்பகுதிக்கு சென்று கல்வெட்டினை ஆய்வு செய்தனர்.கல்வெட்டு குறித்து காளிராஜா தெரிவித்ததாவது: சிவகங்கை அருகேயுள்ள சூரக்குளத்தில் இருந்து நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில் ரயில் பாதை சுரங்கத்தை ஒட்டிய பகுதியில் இடிபாடுகளுடன் கூடிய நான்கு கால் மண்டபம் உள்ளது. இதன் தெற்குபகுதியில் நான்கரை அடி நீளத்தில் ஒரு அடி அகலத்தில் ஐந்து வரிகளை கொண்ட துண்டுக்கல்வெட்டு காணப்படுகிறது.கல் மண்டபம்இடிபாடுகளுடன் காணப்படும் நாலுகால் மண்டபம் இவ்வழியில் செல்வோருக்கு இளைப்பாறும் மண்டபமாகவும், குடிநீர் அருந்தும் இடமாகவும் இருந்திருக்கிறது.
இப்பகுதியில் உள்ள காட்டுக்கோயில்கள் நாட்டரசன்கோட்டை மக்கள் வழிபடும் கோயில்களாக உள்ளன. காட்டுக்கோயில்களுக்கு செல்பவர்கள் தாகம் தணிக்க இம் மண்டபம் அமைக்கப்பட்டிருக்கலாம்.குலசேகர பாண்டியன் கல்வெட்டுகுலசேகர பாண்டிய மன்னன் கி.பி., 1269 முதல் 1311 வரை ஆட்சி செய்துள்ளார். இக்கல்வெட்டு 1275 ம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. குலசேகர பாண்டிய மன்னர் காலத்து கல்வெட்டாகும்.ஸ்ரீகோமார பன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் குலசேகரத்தேவருக்கு ஏழாம் ஆண்டு முடி கொண்ட சோழபுரத்தில் உள்ள திருச்சிவணமுடைய நாயனார் கோயில் தானத்தார் எனும் கோயில் அலுவலர்கள் இவ்வூரை சேர்ந்த உய்யவந்தான்,எட்டி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை தானமாக விட்டுக்கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் உள்ளது.கோயில் தானத்தார் என்பது கோவிலை நிர்வகிப்பதற்காக அரசரால் நியமிக்கப்பட்டவர்கள். 745 ஆண்டு பழமையான பாண்டியர்கள் கால கல்வெட்டு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது, என்றார்.