பதிவு செய்த நாள்
02
அக்
2021
09:10
சென்னை: கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், இணைய வழியாக உதவ லாம் என்று ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:கோவில்களின் திருப்பணிக்கு நிதியுதவி, பொருளுதவி வழங்க ஏராளமானோர் முன்வருகின்றனர். அவர்கள், ஹிந்து சமய அறநிலைய துறையின், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக, ஹிந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில், நன்கொடையாளர் பதிவு என்ற தலைப்பினை தேர்வு செய்ய வேண்டும். பின், தங்களுக்கு விருப்பமான கோவிலை தேர்வு செய்ய வேண்டும்.தங்களின் பெயர், முகவரி, மொபைல் போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின், ஒப்புகை சீட்டு அனுப்பி வைக்கப்படும். பின், சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தினர் தொடர்பு கொள்வர். மேலும், நேரடியாக இணைய வழியாக நிதியளித்தும் ரசீதை, மின்னஞ்சல் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட கோவிலுக்கு நேரடியாக சென்று, ஒப்புகை சீட்டை காண்பித்து காணிக்கை செலுத்தலாம். நன்கொடையாளர்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் கட்டுப்பாட்டில் இயங்கும் உதவி மையத்தை, 044- - 2833 9999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.