பெங்களுரு விபூதிபுரத்தில் அருள்புரியும் லிங்க வீரபத்திரரை தரிசித்தால் அறிவும், அழகும் கொண்ட நல்ல குழந்தைகள் பிறப்பார்கள். சாந்தமான முகத்துடன் பத்ரகாளியம்மன் சன்னதியும் இங்குள்ளது. பழங்காலத்தில் வீரபல்லாளன் என்னும் மன்னர் இப்பகுதியை ஆட்சி செய்தார். பக்தரான அவருக்கு சிவபெருமானின் அம்சமான வீரபத்திரரை தரிசிக்கும் எண்ணம் ஏற்பட்டதால் தவத்தில் ஈடுபட்டார். மன்னரின் பக்தியை மெச்சிய சிவபெருமான் வீரபத்திரராக காட்சியளித்தார். தான் தரிசித்த கோலத்தில் சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். விபூதிப்புரம் வீரசிம்மாசன சமஸ்தான மடத்தின் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது. வடக்கு நோக்கிய இத்தலத்தில் சிவனே வீரபத்திரராக இருப்பதால் சிவனுக்குரிய புலித்தோல் நிற ஆடையை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். கையில் திரிசூலம், உடுக்கை உள்ளது. தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் கருவறையில் வணங்கியபடி உள்ளனர். வீரபத்திரருக்கு பின்புறம் பீடத்தில் சிவலிங்கம் உள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் சன்னதிக்குள் வீரபத்திரரின் தலைக்கு மேலே லிங்கம் இருக்கும்படியான அமைப்பு தெரிகிறது. இதனால் ‘லிங்க வீரபத்திரர்’ என இவர் அழைக்கப்படுகிறார். கருவறைக்கு எதிரில் நந்தி உள்ளது. பத்திரகாளியம்மன் சாந்தமான முகத்துடன் தனி சன்னதியில் இருக்கிறாள். இவளை ‘காளிகாம்பாள்’ என்கின்றனர். வீரபத்திரருக்கு ஞாயிற்றுக்கிழமை, அமாவாசையன்று ஹோமம், ருத்ராபிஷேகம் நடக்கிறது. கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையில் ‘அக்னி பிரவேசம்’ என்னும் பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது. அப்போது கோயிலுக்கு எதிரில் அக்னி குண்டம் வளர்த்து, அதிலிருந்து அர்ச்சகர் கைகளால் நெருப்பு எடுத்து சாம்பிராணி துாபம் இடுவர். அதன் பின்னர் சுவாமி பல்லக்கில் எழுந்தருள்வார். புத்திரப்பேறு இல்லாதவர்கள் காளிகாம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம், வில்வ மாலை, வளையல் அணிவித்தும், வீரபத்திரருக்கு பாயசம் படைத்தும் வழிபடுகின்றனர். மனக்குழப்பம், எதிரிபயம் தீர வீரபத்திரருக்கு வெற்றிலை, எலுமிச்சை மாலை அணிவிக்கின்றனர். நினைத்தது நிறைவேற திங்கட்கிழமைகளில் ருத்ராபிஷேகம் செய்கின்றனர். எப்படி செல்வது: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து 18 கி.மீ.,