உத்தப்புரத்தில் இன்று கும்பாபிஷேகம்: போலீசார் குவிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2012 10:06
எழுமலை: மதுரை மாவட்டம் எழுமலை அருகே உத்தப்புரத்தில் இன்று (29ம் தேதி) கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி போலீசார் குவிக்கப்பட்டனர். உத்தப்புரத்தில் அரச மர வழிபாடு, நிழற்குடை அமைத்தல் போன்றவற்றில் இரு பிரிவினருக்குள் பிரச்னை இருந்தது. இரு பிரிவினர் மீதும் போலீசார் ஏராளமான வழக்குகளை பதிவு செய்தனர். தனி புறக்காவல் நிலையம் அமைத்து 100 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் புனரமைக்கப்பட்ட ஒரு பிரிவினருக்கு சொந்தமான முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை போலீசார் நிறுத்தி வைத்து 144 தடையுத்தரவை பிறப்பித்தனர். தடை 15 தடவைகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டது. மற்றொரு பிரிவினர் கடந்த ஆண்டு மாரியம்மன் கோயிலுக்குள் பிரவேசம் செய்யப் போவதாக அறிவித்தனர். போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி நுழைய முயன்ற 193 பேர் கைதாகினர். எஸ்.பி.,யாக இருந்த ஆஸ்ரா கர்க் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் இரு பிரிவினரையும் அழைத்து பேசினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்ய ஒரு பிரிவினருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இன்று கும்பாபிஷேகம்: இரு பிரிவினர் மீதும் பதிவான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. நிழற்குடை கட்டும் பணி நடந்து வருகிறது. போலீசாரால் நிறுத்தப்பட்ட மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது. ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டி.ஐ.ஜி., பாலநாகதேவி சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். இன்று காலை 7 முதல் 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உசிலம்பட்டியில் இருந்து எழுமலை வரும் பஸ்கள் தாடையம்பட்டி, செல்லாயிபுரம் வழியாக செல்லும்.