பதிவு செய்த நாள்
07
அக்
2021
05:10
தொண்டாமுத்தூர்: பேரூர் படித்துறையில், புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்தனர்.
மகாளய அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், மகாளய அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்வார்கள். கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு, மகாளய அமாவாசையையொட்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகிய நான்கு கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், ஆற்றங்கரைகளில் திதி, தர்ப்பணம் செய்யவும், தடை விதித்து மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டு இருந்தார். இதன்படி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், அடிவாரத்தில் உள்ள படிக்கட்டு பகுதியில், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி சுவாமியை வழிபட்டு சென்றனர்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள் பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். படித்துறையில், வெற்றிலை, பாக்கு, அரளிப்பூ, பிண்டம் உள்ளிட்டவைகள் அடங்கிய தர்ப்பண தட்டு, 50 ரூபாய்க்கும், அகத்திக்கீரை ஒரு கட்டு, 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், இதனை வாங்கி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை கோவில் திறக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.