பதிவு செய்த நாள்
07
அக்
2021
05:10
மேட்டுப்பாளையம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற கோவில்கள் அடைக்கப்பட்டதால், பக்தர்கள் நுழைவாயில் கேட்டு முன்பு சூடம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் கோவில் உள்ளே செல்ல முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு மிகவும் பிரசித்தி பெற்ற, கோவில்களை அமாவாசை அன்று அடைக்கும்படி அறிவித்திருந்தது. இதையடுத்து மேட்டுப்பாளையம் தாலுகாவில் பிரசித்தி பெற்ற கோவில்களான, வனபத்ரகாளியம்மன் கோவில், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகிய கோவில்கள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அன்று, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம். ஆனால் காரமடை அரங்கநாதர் கோவிலும், வனபத்ரகாளியம்மன் கோவிலும் அடைக்கப்பட்டு இருந்ததால், நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோயில் நுழைவாயில் கேட்டு முன்பாக, சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர். கோவிலின் உள்ளே செல்ல முடியாத வகையில், நுழைவாயில் கேட் பூட்டப்பட்டிருந்ததால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும், டாஸ்மாக் கடைகள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றை, சமூக இடைவெளி விட்டு திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு தடை விதித்துள்ளது. முக்கியமான அமாவாசை மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் வழிபாட்டுத் தலங்களை அடைக்கும்படி அரசு அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில்களில், சுவாமியை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் உள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகளையும், தியேட்டர்களையும் திறக்க, அனுமதி வழங்கிய தமிழக அரசு, கோவில்களை திறக்க அனுமதி மறுத்துள்ளது, வேதனையை அளிக்கிறது. எனவே, சமூக இடைவெளியை, பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என, தமிழக அரசு, எல்லா நாட்களிலும் கோவில்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.