பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த, கொண்டசாமனஹள்ளி கிராமத்தில் உள்ள யாக தேவி திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கொண்டசாமனஹள்ளி கிராமத்தில் யாகதேவி திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த, 7ல், கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று அதிகாலை கலச ஆராதனை, சாந்தி ஹோமம் நடந்தது. இதையடுத்து யாகசாலையிலிருந்து, கும்பத்தை சிவாச்சாரியர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர். கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் திரவுபதி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்புஅலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.