கோல்கட்டாவில் புர்ஜ் கலிபா துர்கா பூஜைக்காக வடிவமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2021 09:10
கோல்கட்டா : துர்கா பூஜையை ஒட்டி உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபாவின் மாதிரி வடிவம், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நவராத்திரி விழா துர்கா பூஜை என்ற பெயரில் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பந்தல்கள் அமைத்து, பிரமாண்ட துர்கை அம்மன் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடித்து துர்கா பூஜையை கொண்டாட மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் கோல்கட்டாவின் சால்ட் லேக் சிட்டியில் உள்ள லேக் டவுன் என்ற இடத்தில், ஸ்ரீபூமி ஸ்போர்டிங் கிளப் என்ற விளையாட்டு மையம் உள்ளது.இங்கு துர்கா பூஜையின் போது ஆண்டுதோறும் விதவிதமான பிரமாண்ட மாதிரிகள் செய்து பார்வைக்கு வைப்பது வழக்கம். கடந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலின் பிரமாண்ட மாதிரி வடிவம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் உள்ள உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபாவின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.மொத்தம் 250 தொழிலாளர்களின் உதவியுடன் மூன்றரை மாத உழைப்பில் 145 அடி உயரத்துக்கு புர்ஜ் கலிபாவின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 6,000 அக்ரலிக் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புர்ஜ் கலிபாவின் மாதிரி வடிவத்தில் நிபுணர்களின் உதவியுடன் நவீன விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவில் பார்ப்பதற்கு துபாயில் உள்ள கட்டடத்தை போலவே ஜொலிக்கிறது.பொது மக்கள் பிரமிப்புடன் வேடிக்கை பார்ப்பதால் சுற்றி உள்ள சாலைகளில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.இந்த பந்தலில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்ட துர்கை அம்மன் சிலை 45 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.