பதிவு செய்த நாள்
12
அக்
2021
04:10
மதுரை : மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர், சோலைமலை, திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களின் பிரசாதங்களுக்கு மத்திய உணவு பாதுகாப்புத்துறைதரச்சான்று கிடைத்துள்ளது. உணவு வணிகர்கள் தரமான உணவு தயாரித்து சான்றுபெற்று மதுரைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கேட்டு கொண்டார்.
அவர் அளித்த சிறப்பு பேட்டி...: உணவு தொழில்புரிவோர் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டுமா
ஆம். ஆண்டிற்கு ரூ.12 லட்சம், மாதம் ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் உணவு தொழில் செய்வோர் ரூ.2000 செலுத்தி உரிமம் மற்றும்ஆண்டிற்கு ரூ.12 லட்சம், மாதம் ரூ.ஒரு லட்சத்திற்கு கீழ் தொழில் செய்வோர் ரூ.100 செலுத்தி பதிவுச்சான்று பெற வேண்டும். உரிமத்தை நியமன அலுவலர் மற்றும் சான்றை உணவு பாதுகாப்பு அலுவலர்வழங்குவர். மதுரையில் ஏப்., - ஜூலையில் உரிமம், சான்று 80 சதவீதம் பேர் எடுத்துள்ளனர்.
மதுரையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட உணவுப்பொருட்கள் மாதிரிகள், முடிவுகள் என்ன
ஏப்., - ஜூலை மட்டும் 275 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. தரமில்லா உணவு என அடையாளம் காணப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ரூ.3,70,000 அபராதம் விதித்துள்ளது. வருவாய் நீதிமன்றத்தில் ரூ.1,90,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரோட்டோரமுள்ள தள்ளுவண்டி கடைகளை உணவு பாதுகாப்பு துறை அனுமதிக்கிறதா
ஆம். தள்ளுவண்டி உணவு தொழில் செய்ய அனுமதி உண்டு. அவசியம் பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும். சமீபத்தில் மதுரையில் 48 ரோட்டோர உணவு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி, இலவச கிட்,2500 உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி, சான்று வழங்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் விவகாரத்தில் தற்போதைய நடவடிக்கை என்ன
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள 950 கிலோ குட்காவை போலீசார் உதவியுடன் பறிமுதல் செய்து மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். உணவு பாதுகாப்புத்துறை, உணவு வணிர்கள் சங்க முகாம்களில் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்க மாட்டோம் என உறுதி மொழி எடுக்கப்படுகிறது. நேரடி அபராதம் ரூ. 50,000 விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை உணவு பாதுகாப்புத்துறைக்கு கிடைத்த சான்றுகள், பெருமைகள் குறித்து
கடவுளுக்கு சுகாதாரமான பிரசாதம் (போகு- பிளிஸ்புல் ஹைஜீன் ஆபரிங் ஆப் காட்) என்ற மத்திய உணவு பாதுகாப்புத் துறை சான்று அழகர்கோவில், சோலைமலை, திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களுக்கு பெற்றுள்ளோம். 17 அங்கன்வாடி மையங்கள் உட்பட 54 உணவு கூடங்களுக்கு சுகாதார மதிப்பீடு திட்டம் (ஹைஜீன் ரேட்டிங் ஸ்கீம்), 2 தனியார் மருத்துவமனை, ஒரு தொழில் நிறுனத்திற்கு ஈட் ரைட் கேம்பஸ் (இ.ஆர்.சி) சான்று கிடைத்தது. இரண்டு ஆண்டுகளில் ரூக்கோ (ரீ பர்பஸ் யூஸ்டு குக்கிங் ஆயில்) ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை ஒரு லட்சம் லிட்டர் சேகரித்து பயோ டீசல் தயாரிக்க வழங்கப்பட்டது. தமிழக கோயில்களில் மீனாட்சி அம்மன் கோயிலில் இத்திட்டம் முதல் முறையாக துவங்கியது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதல் என்ன
சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு கமிஷனர், கலெக்டர் அறிவுறுத்தலின்படி உணவகங்களில் பார்சல் கவர்களை ஊதி பார்சல் செய்யக்கூடாது. பணியாளர்கள் தினமும் கையுறை, முககவசம் அணிய வேண்டும். இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தரமில்லா உணவு தயாரிப்பு குறித்து பொதுமக்கள் எப்படி புகார் தெரிவிக்கலாம்
உணவகங்களில் தரமான உணவு தயாரிக்கவேண்டும் என்பது நோக்கம். அதற்காக பல சோதனைகள் நடக்கின்றன. மக்கள் தரமற்ற உணவு என அறியும் பட்சத்தில் 94440 42322 அலைபேசி வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்போர் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும். 24 மணி நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு புகார்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு பேட்டியளித்தார்.