பதிவு செய்த நாள்
15
அக்
2021
04:10
மணலிபுதுநகர்: புரட்டாசி திருவிழாவின் ஆறாம் நாளில், அய்யா வைகுண்ட தர்மபதி, சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வந்தார்.
சென்னை, மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், பிரசித்திப் பெற்றது. இங்கு, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இவ்வாண்டு, 8 ம் தேதி அதிகாலை, அய்யா திருநாம கொடியேற்றத்துடன், புரட்டாசி திருவிழா துவங்கியது. விழா நாட்களில் கருடர், காளை, அன்னம், மயில், ஆஞ்சநேயர் உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்தார். ஆறாம் நாளான நேற்று முன்தினம் மாலை, அய்யா வைகுண்ட பரம்பொருள், சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளினார். செண்டை மேளம், நையாண்டி மேள வாத்திய இசையும், அய்யா பல்லக்கில் ஒய்யாரமாய் பதிவலம் வந்தார். பதிவலத்தின் போது, அய்யா ஹரஹர சிவ சிவ என, விண்ணதிர முழங்கினர். பத்து நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, திருக்கல்யாண ஏடு வாசிப்பு; சரக்கு விளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை நிகழ்வு, இன்றிரவும், அய்யா திருத்தேரோட்டம், 17ம் தேதி காலையும் நடைபெறும்.அன்றிரவு, பூம்பல்லக்கு வாகனத்தில் அய்யா பதிவலம் வருதல், பின் இரவில் கொடி அமர்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவுறும்.