வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாட்டில் உள்ளூர் ,வெளி மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் தரிசித்தனர்.
நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மலை அடிவாரத்தில் குவிந்தனர். காலை 7:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்க உடல் வெப்ப பரிசோதனை பின் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்ததால் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குபாறைகளில் தீயணைப்பு துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நேற்று மதியம் 12:00 மணிக்கு மலை அடிவாரம் ,வனப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் மலையில் இருந்து இறங்குவது சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு வகை அபிஷேகங்களுடன், பவுர்ணமி பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். ஆறு மாதத்திற்கு பிறகு பவுர்ணமி வழிபாடு பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன் செய்திருந்தனர். வத்திராயிருப்பு , பேரையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.