பதிவு செய்த நாள்
25
அக்
2021
06:10
சென்னை : “தமிழகத்தில், 1,789 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன,” என, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சென்னை கொசப்பேட்டை, கந்தசாமி ஆதி மொட்டையம்மன் கோவிலில் நேற்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: அறநிலையத் துறை மூலம் 342.38 ஏக்கர் நிலம்; 317.214 கிரவுண்ட் மனை; 24.89 கிரவுண்ட் கட்டடம், 16.25 கிரவுண்ட் குளம் ஆகியவை, 410 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 1,789.2 கோடி ரூபாயாகும். கோவில் நில ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும்.சில அமைப்புகள், தி.மு.க., ஹிந்துக்களுக்கு, ஆன்மிகத்திற்கு எதிரான இயக்கம் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளன. முதல்வர் பதவி ஏற்ற பின், அதை தகர்த்தெறிந்துள்ளார். நியாயமான குறைகள் என்றால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். குயின்ஸ்லேண்ட் விவகாரத்தில், உரிமையாளரிடம் சமரசம் செய்ய, இது பஞ்சாயத்து அரசல்ல. நீதிமன்ற இறுதி முடிவு எட்டப்படவில்லை என்பதால், அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளவில்லை.அந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது. நகைகளை உருக்கி வருவாயை பெருக்குவதை, தேவையில்லாமல் பூதாகாரமாக்க நினைப்பவர்கள், நிச்சயம் தோல்வி அடைவர்.இவ்வாறு, அவர் கூறினார்.