புதுச்சேரி: சின்மயா மிஷன் புதுச்சேரி சார்பில் 17வது முறையாக சமஷ்டி மஹா காயத்ரி மற்றும் அனுமன் ஹோமம், கிருஷ்ணா நகர் மெயின் ரோட்டில் உள்ள சின்மய சூரியன் கோவிலில் நேற்று நடந்தது.
சின்மயா இயக்கத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு சின்மய அம்ருத் மஹோத்ஸவம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் அம்ருத் மஹோத்சவம், ரத சப்தமி தினத்தை முன்னிட்டு, அனுமான் சாலீஸா ஹோமம் சேர்க்கப்பட்டுள்ளது.
மஹா ஹோமம் காலை 5.30 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து, 16 ஹோம குண்டங்களில் 3000 த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், காலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 45 நிமிட யாகத்தில் 108 முறை ஆஹுதி இட்டனர். இவ்வாறு நாள் முழுதும் நடந்த நிகழ்வில் 3 லட்சத்திற்கும் மேலாக காயத்ரி மந்திரங்கள் மற்றும் 15க்கும் மேலாக அனுமான் சாலீஸா ஹோமம் நடந்தது.
மேலும், நாள் முழுதும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சம்பூரண பூரணாஹுதி நடந்தது. இதில், ராஜா சாஸ்திரிகள், யுவராஜ், சரண்யா சைதன்யா மற்றும் வேத பாடசாலை குழந்தைகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சின்மயா மிஷன் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், புதுச்சேரி தலைவர் மற்றும் ராம் சில்க்ஸ் உரிமையாளரான நடராஜன், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.