பழநி: பழநியில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. பழநி மலைக்கோயிலில் நவ.4 முதல் நவ.,10 வரை கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது.
நவ., 4ல் காப்புக் கட்டுதல் நடைபெற்றது. பழநி மலைக்கோயில் நான்கு கிரிவீதிகளில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதற்கென பெரியநாயகியம்மன் கோயிலில் நான்கு சூரன்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் என நான்கு சூரன்களின் உருவ பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 6 அடி உயரமுள்ள சூரன் பொம்மைகளில் தலைகள் பொருத்தப்படும். அதன் பின் மாலையில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். நவ.,10 காலையில் மலைக்கோயிலிலும், மாலையில் பெரியநாயகியம்மன் கோயிலிலும் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்வும், திருக்கல்யாண நிகழ்வும் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்கள் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. விழா நிகழ்ச்சிகள் நடைபெறாத சமயங்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.