பதிவு செய்த நாள்
08
நவ
2021
02:11
சூலூர்: சூலூர் சிவன், பெருமாள் கோவில் திருப்பணிகள் தாமதமாவதால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில், சின்னக்குளத்தை ஒட்டி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவிலும், பெரிய குளத்தை ஒட்டி, ஸ்ரீ தேவி பூதேவி சமேத திருவேங்கட நாத பெருமாள் கோவிலும் உள்ளன. பல நூறாண்டுகளுக்கு மேலான, பழமையான இக்கோவில்கள் சூலூரின் அடையாளமாக உள்ளன. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில்களுக்கு, பல நூறு ஏக்கர் பூமிகள் உள்ளன. கோவில்களில் நடக்கும் விழாக்களில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இரு கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால், கோவில் கோபுரங்கள், பிரகார தளங்கள் பொலிவிழந்து உள்ளதால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: சூலூரில் உள்ள சிவன் கோவில், பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது. சிவன் கோவிலிலில் கோபுரங்களில் வண்ணங்கள் பொலிவிழந்து விட்டன. ஆங்காங்கே தளங்கள் பெயர்த்துள்ளன. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. பெருமாள் கோவிலிலும் இதே நிலை உள்ளது. சிவன் கோவில் திருப்பணிகளுக்கு ரூ. 20 லட்சமும், பெருமாள் கோவில் திருப்பணிகளுக்கு, ரூ. 37 லட்சம் அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், திருப்பணிகள் தொடங்குவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. எப்போது துவங்குவார்கள் எனத்தெரியவில்லை. இதனால், சுற்றுவட்டார பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். விரைந்து திருப்பணிகளை துவக்கி, கும்பாபிஷேகத்தை நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பக்தர்கள் கூறினர்.