காரமடையில் அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை, கோவிலில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், காலசந்தி பூஜையும் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வைணவத்தில் சிறந்த ஆச்சாரியரான மணவாள மாமுனியின் திரு நட்சத்திரத்தை முன்னிட்டு அவருக்கு, ராமானுஜர் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு விஷ்வக்சேனர் பூஜை, புண்யாகவசனம், நவ கலச ஆவாஹனம் முடிந்தபின்பு, ராமானுஜர், மணவாள மாமுனிக்கு, ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜை முடிந்த பின்பு, ரங்க மண்டபத்தில் மணவாள மாமுனி எழுந்தருளினார். அரங்கநாதர் சுவாமியிடம் இருந்து, பரிவட்டம், சடாரி மரியாதை இவருக்கு செய்யப்பட்டது. இவ்விழாவில் கோவில் ஸ்தலத்தார் வேத வியாச ஸ்ரீதர் பட்டர், நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் உபதேச ரத்தினமாலை செய்வித்தனர். பின்பு கோவிலை வலம் வந்து மீண்டும் ராமானுஜர் சன்னதியை மணவாளமாமுனி அடைந்தார். இவ்விழாவில் மிராசுதாரர்கள், கோவில் அர்ச்சகர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.