திருப்பூர்: திருப்பூர் அருகே 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யனார் சிலையும் 600 ஆண்டுகள் பழமையான தாய் தெய்வ சிலையும் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்பூரில் உள்ள வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது:திருப்பூர் அருகே பூமலுார் பொன் காளியம்மன் கோவில் வளாகத்தில் பழமையான சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. 70 செ.மீ. அகலம் 80 செ.மீ. உயரம் உள்ள பீடம் மீது அமர்ந்த நிலையில் அய்யனார் காட்சி தருகிறார். வலது கையில் செண்டாயுதம் பிடித்த படியும் மார்பில் சன்னவீரம் அணிந்தும் தலையில் கிரீடம் சூடியபடியும் உள்ளார்.
இருபுறமும் பூரணை புஷ்கலை ஆகிய தேவியர் அமர்ந்த நிலையில் உள்ளனர். அய்யனாருக்கு மேலாக பக்கத்துக்கு ஒருவராக பணிப்பெண்கள் சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர். அய்யனார் சிலை 900 ஆண்டுகள் பழமையானது. அதேபோல் 80 செ.மீ. உயரம் மற்றும் 90 செ.மீ. அகலத்தில் பல்லக்கில் அமர்ந்து பயணிக்கும் தாய் தெய்வத்தின் சிலையும் உள்ளது. ஆறு பேர் பல்லக்கை சுமந்து செல்கின்றனர். வில் - அம்பு குறுவாள் ஈட்டி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரர்களும் உடன் செல்கின்றனர்.இந்த சிலை 600 ஆண்டுகள் பழமையானது. இத்தகைய அபூர்வ சிற்பங்களால் பூமலுார் கிராமம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை அறிய முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.