கோயிலில் மரங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய அர்ச்சகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2021 11:11
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள நாகலிங்க மரங்களுக்கு 37 வது பிறந்த நாளை அர்ச்சகர் ராமானுஜர் தீபாராதனை காட்டி கொண்டாடினார்.
இக்கோயில் அர்ச்சகர் எம்.வி.ராமானுஜம் 86, கோயில் வளாகத்தில் 36 ஆண்டுகளுக்கு முன் நவ.,10ல் ஆண், பெண் நாகலிங்க மரக்கன்றுகளை நட்டார். தினமும் தண்ணீர் பாய்ச்சி வளர்த்தார். அதில் கிடைக்கும் பூக்களில் சுவாமிக்கு பூஜை செய்வார். நேற்று இரு மரங்களுக்கும் 37 வது பிறந்தநாளை யொட்டி மரங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்து தீபாராதனை காட்டினார். பக்தர்கள் மரங்களுக்கு நீர் ஊற்றி வணங்கினர். அர்ச்சகர் ராமானுஜர் கூறுகையில்: மரங்களும் இறைவனின் பிள்ளைகள். ஆண், பெண் நாகலிங்க மரக்கன்றுகள் கோயிலில் வளர்ப்பது விசேஷம். 36 ஆண்டுகளுக்கு முன் நடவு செய்து ஆண்டுதோறும் நவ.,10ல் மரங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறேன். இருமரங்களும் 65 அடி வளர்ந்துள்ளன. வேர் 100 அடி துாரத்தில் உள்ள கண்மாய் வரை நீண்டுள்ளது. நேற்றுவரை 1,600 திருமணம் நடத்தியுள்ளேன். தம்பதிகளாக நாகலிங்கம் மரங்களை வணங்கினால் சகல செல்வங்களும் கிடைக்கும். தற்போது மழைக்காலம் என்பதால் அதிகளவில் காய்கள் காய்த்துள்ளன என்றார்.