வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வனப்பகுதியில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ததால், இன்று பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று பிரதோச வழிபாடு மற்றும் நவம்பர் 17 அன்று கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு, நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், நேற்று இரவு 9:00 மணிக்கு மேல் சதுரகிரி வனப்பகுதியில் வாழைத்தோப்பு, தாணிப்பாறை, சாப்டூர் பகுதியில் சாரல் மழை பெய்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான அனுமதியை கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. நாளை மறுநாள் பவுர்ணமியன்று மழை பெய்யாவிட்டால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.