நாயகத்தை பார்க்க தினமும் ஒரு பெண் பழங்களுடன் வருவாள். அதில் ஒன்றிரண்டை எடுத்து கொண்டு மற்றதை சீடர்களிடம் கொடுப்பார் நாயகம். இதைப்பார்த்த பெண், ‘தான் வருவதை அவர் விரும்பவில்லையா அல்லது பழம் சுவையாக இல்லையா’ என சிந்தித்தாள். இப்படி ஒருநாள் திராட்சைப் பழங்களுடன் வந்தாள். ஆனால் அவர் வழக்கத்திற்கு மாறாக அனைத்து பழங்களையும் சாப்பிட்டதால், அவள் மகிழ்ச்சி அடைந்தாள். இதைப்பார்த்து ஆச்சர்யப்பட்ட சீடர்கள் இதற்கான விளக்கத்தை கேட்டனர். ‘‘வழக்கமாக உங்களின் வயிற்றுப்பசியை போக்க விரும்புவேன். இன்று அவளின் மனப்பசியை போக்கினேன்’’ என்றார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘‘பழங்கள் புளிப்பாக இருந்ததால் அதை வாயில் வைத்ததும் நீங்கள் துப்பி விடுவீர்கள். அதைக் கண்டால் அவள் வருந்துவாள். அதுமட்டுமில்லாமல் நான் சாப்பிடவில்லையே என்று அவளின் வருத்தமும் தீருமல்லவா’’ என்றார். இதைக்கேட்ட அந்த பெண் கண்ணீர் வடித்தாள்.