பதிவு செய்த நாள்
16
நவ
2021
03:11
மேட்டுப்பாளையம்: ஜடையம்பாளையத்தியில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையத்தில் புதிதாக வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் கட்டப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா தொடங்கியது. மத்திய பிரதேசம் நர்மதா ஆற்றில் இருந்து, எடுத்து வரப்பட்ட, லிங்கத்தை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா, 14 ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவகிரக பூஜை, மகாலட்சுமி ஹோமம், கால பைரவர் ஹோமம், கோ பூஜை ஆகியவை நடந்தன. பின்பு கலச தீர்த்தம், முளைப்பாரி, வெள்ளிங்கிரி ஆண்டவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளின் சிலைகளை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். வழிபாட்டுடன், முதல் கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன. இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜையும், வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு நாடி சந்தானம், மகாதீபாராதனை நடந்தது. பத்து மணிக்கு யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியம், நாதஸ்வரம் இசை முழங்க தீர்த்த குடங்களை, கோவிலை சுற்றி எடுத்து வந்தனர். கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபரர் சாமி, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. விழாவில் ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, ஊர் தலைவர் ரங்கசாமி, ஊர் கவுடர் பார்த்திபன், ஊராட்சி துணைத்தலைவர் மாரண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகசுந்தரம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் கவுடர், பொதுமக்கள், வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.