பதிவு செய்த நாள்
16
நவ
2021
05:11
திருச்சுழி: திருச்சுழி குண்டாறு பகுதியில், ஐப்பசி கடைசி நாளான நேற்று, கணவனின் ஆயுள் நீடிக்கவும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடக்கவும் கடைமுக பூஜை நடந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பூஜை நடந்து வருகிறது. ஆற்றின் கரையில் கன்னிப்பெண்கள் ஏழு வகையான மண்ணை எடுத்து கங்கை, காவிரி, யமுனை, சரஸ்வதி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி ஆகிய ஏழு கன்னி தெய்வங்களை உருவமாக செய்து வழிபட்டனர். தங்கள் கணவனின் ஆயுளை நீட்டிக்க சிறப்பு பூஜைகள் செய்தனர். பெண்கள் புத்தாடைகள், தங்க நகைகள், 21 வகை பழ வகைகளை வைத்து கரும்பினால் பந்தல் அமைத்து, கரை மேல் உள்ள திருமேனிநாதர் சகாய வள்ளி அம்மனை தரிசித்தனர். இதுகுறித்து, வழிபாடு செய்த பெண்கள் கூறுகையில், " கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த பூஜை செய்து வருகிறோம். இங்கு பூஜை செய்வது ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்கு சமம். பூஜை செய்தால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் தீரும். கணவனின் ஆயுள் நீடிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்". என்றனர். அருப்புக்கோட்டை, திருச்சுழி, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.