திருப்பதி : கன மழை காரணமாக திருமலைக்கு செல்லும் இரு நடைபாதைகளும் இன்றும், நாளையும் மூடப்பட உள்ளன. இதனால் இந்த இரண்டு நாட்களும் பக்தர்கள் பாதயாத்திரை செல்ல முடியாது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக ஆந்திராவில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.எனவே, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலைக்கு செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மார்கங்களை இன்றும், நாளையும் மூடும்படி தேவஸ்தான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.பலத்த மழை காரணமாக நடைபாதை மார்கங்களில் மண்சரிவு ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. எனவே, தேவஸ்தானம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. தரிசன டிக்கெட் இருந்தாலும் பக்தர்கள் இந்த இரு நாட்களில் பாதயாத்திரயைாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.மேலும் இரவு நேரத்தில் கன மழை அதிகமாக இருந்தால் மலைப் பாதையையும் மூடி அதிகாலை மீண்டும் போக்குவரத்திற்காக திறக்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.