திருப்பதி: கனமழை காரணமாக திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலை இன்று வெள்ளம் சூழ்ந்தது. தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அவதியுற்றனர். இதனையடுத்து திருப்பதி-திருமலை இடையேயான வாகன போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. பருவமழை காரணமாக தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்று, பல்வேறு மழை காரணிகள் உருவாகி, மாநிலம் முழுதும் தொடர்ச்சியாக கன மழை பெய்த வண்ணம் உள்ளது. ஆந்திராவிலும் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
போக்குவரத்து நிறுத்தம்: இந்நிலையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இன்று (நவ.18) கனமழை காரணமாக கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. தவிர பக்தர்கள் செல்லும் மாலைப்பாதை வழியாக மழைநீர் வழிந்தோடுவதால் கடந்த சில நாட்களுக்கு முன் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி - திருமலை இடையேயான சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருமலை - திருப்பதி இடையேயான சாலை போக்குவரத்து குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.