கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், உலக உயிர்களின் நன்மைக்காக 108 சங்காபிஷேகம் நடந்தது. கன்னிவாடி அருகே மேற்கு தொடர்ச்சிமலையடிவாரத்தில் சோமலிங்கபுரம் உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள மலைக்குன்றின் மெய்கண்ட சித்தர் குகை அருகே சோமலிங்க சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை சோமவாரத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக, சங்காபிஷேகம் நடக்கிறது. நேற்று, முதல் சோமவார சங்காபிஷேகம் நடந்தது.ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், சங்காபிஷேக பூஜை துவங்கியது. மெய்கண்ட சித்தர் குகை அருகே 108 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வேதி தீர்த்தம் நிரப்பப்பட்டு, மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. பின்னர், மூலவர், நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.