பதிவு செய்த நாள்
23
நவ
2021
02:11
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சோமவாரத்தையொட்டி, சங்காபிஷேக விழா நடந்தது.சோமன் என்றால் சந்திரன், அவரது நாள் திங்கள் கிழமை. அந்த கிழமையை சோமவாரம் என குறிப்பிடுவர்; 12 மாதங்களில் வரும் கார்த்திகை சோமவாரம் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால், பெருமான் மகிழ்ந்து வரம் தந்திடுவார் என, கூறப்படுகிறது.
கணவன் மேன்மைகள் பெறவும்; பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழவும்; நோய் நொடிகள் தாக்காமல் இருக்கவும் சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சங்காபிஷேக பூஜை நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்தது. 108 சங்காபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ருத்ரலிங்கேஸ்வரர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தங்க கவச அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காசிவிஸ்வநாதர் சன்னதியில் நடந்த விழாவில், மாலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.சிவலிங்க வடிவில் சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பூஜைக்கு பின் பக்தர்கள் புனித நீரை கையில் ஏந்தி கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், கார்த்திகை மாதத்தின் முதல் சோமவார தினமான நேற்று, சிவாலயங்களில், சங்காபிஷேக பூஜை நடந்தது. பிரசன்ன விநாயகர் கோவிலில், 108 வலம்புரி சங்குகளில், புனித தீர்த்தம் நிரப்பி, லிங்க வடிவில் அலங்கரித்து சிறப்பு பூஜை நடந்தது.அதன்பின், சிவபெருமானுக்கு, புனித தீர்த்தம் செலுத்தி, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சங்காபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.முத்தையா பிள்ளை லே - அவுட் சக்தி விநாயகர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களிலும், சங்காபிஷேக பூஜை நடந்தது. - நிருபர் குழு -