வங்கி பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் கிருஷ்ணன். அவர் தன் 16வது வயதில் சென்னையில் படித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று தி.நகரில் இருந்த தன் பெரியப்பா வீட்டிற்குச் செல்வார். அங்குள்ள அகத்தியர் கோயிலுக்கு அருகில் தான் பெரியப்பாவின் வீடு இருந்தது. ஒருநாள் அகத்தியர் கோயிலுக்கு காஞ்சி மஹாபெரியவர் வரவிருப்பதை அறிந்தார். பெரியப்பாவின் மகன் பாலச்சந்திரனிடம் விலை உயர்ந்த காமிரா ஒன்று இருந்தது. அதன் மூலம் காஞ்சி மஹாபெரியவரை படம் பிடிக்க விரும்பினார் கிருஷ்ணன். மறுநாள் இருவரும் கோயிலுக்குச் சென்றனர். பல்லக்கை விட்டு சுவாமிகள் வெளியே வந்ததும் தயங்கியபடி அனுமதி கேட்டார் கிருஷ்ணன். அவரிடம் இருந்து மெல்லிய புன்னகையே பதிலாக கிடைத்தது. ‘பாலு...நீ போட்டோ எடு’’ என்றார் கிருஷ்ணன். 120 எம்.எம். பிலிம் காமிரா என்பதால் சிறந்த புகைப்படங்கள் கிடைத்தன. அதன் பிரதிகளை உறவினர், நண்பர்களுக்கு கொடுத்தனர். ஆண்டுகள் பல கடந்தன. வங்கிப்பணியில் சேர்ந்த கிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்தார். 1990ல் வங்கித் தலைவருடன் சுவாமிகளைத் தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார். ஏழை கோயில் அர்ச்சகர்களுக்கு உதவி செய்வதற்காக மடத்தால் நிறுவப்பட்ட ‘கச்சி மூதுார் அர்ச்சகர் டிரஸ்ட்டிற்கு’ பண உதவி பெற்றுத் தர வேண்டும் என வங்கித்தலைவரிடம் கேட்டார் மஹாபெரியவர். வங்கி மூலம் உதவுவதாக அவரும் உறுதியளித்தார். பின்னர் கிருஷ்ணன் தன் சொந்த ஊர் நாவல்பாக்கம் என அறிமுகப்படுத்திய போது மஹாபெரியவர் அங்குள்ள கோயில்களைப் பற்றி விவரித்தபடியே பிரசாதம் கொடுத்தார். விடைபெற்ற போது மஹாபெரியவர் கேட்ட கேள்விக்கு கிருஷ்ணன் மயங்கி விழாத குறை தான். ‘‘அன்னிக்கி போட்டோ எடுத்தீங்களே நன்னா வந்ததா?” என்றாரே பார்க்கலாம். 28 ஆண்டுகளுக்கு முன்பு, 16 வயது இளைஞராக இருந்த போது சென்னை தி.நகரில் நடந்ததை நினைவுபடுத்தினார் சுவாமிகள். இதைக் கேட்கும் போது கிருஷ்ணனுக்கு அப்போது வயது 44. மஹாபெரியவர் தன்னைச் சரியாக அடையாளம் கண்டுபிடித்ததைக் கண்டு அதிசயித்தார் கிருஷ்ணன்.