பதிவு செய்த நாள்
24
நவ
2021
01:11
புதுச்சேரி : நாடு சண்முக வேலாயுத சுவாமிகளின் குரு பூஜையை முன்னிட்டு, நந்திகேஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. புதுச்சேரி, வெள்ளாழ வீதியில் நந்திகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது
இக்கோவிலில் நாடு சண்முக வேலாயுத சுவாமிகளின் 113வது குரு பூஜை விழா கடந்த 18ம் தேதி வேள்வியுடன் துவங்கியது. விழாவையொட்டி, புதுச்சேரி பாரத் குழுவினரின் தாளவாத்திய அஞ்சலி, ஸ்ரீ சகோதரிகள் குழுவினரின் இசை நிகழ்ச்சி, சங்கரிதேவி சொற்பொழிவு நடந்தது. நேற்று முன்தினம் காலை, குருபூஜை வேள்வி, கலச வழிபாடு, புனித நீர் வழிபாடு, மகேஸ்வர பூஜை, அன்னம் பாலிப்பு நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, இந்திர ஞான தங்கரத்தில் மணக்குள விநாயகர் வெள்ளாழ வீதியில் உள்ள நந்திகேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். அங்கு, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், பழநி ஆதீனம் சாகு சண்முக அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய குரு மகா சன்னிதானம் சுவாமிகள் முன்னிலையில், நந்திகேஸ்வரர் சுவாமிக்கு திருமுறை வேத மந்திரங்கள் ஒலிக்க, சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. பின், நந்திகேஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதியுலா நடந்தது.