ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று (நவ.24) கோயிலுக்கு வருகிறார். இதனை முன்னிட்டு நேற்று மத்தியபிரதேச சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் கோயிலின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, செயல் அலுவலர் இளங்கோவனுடன் ஆலோசனை செய்தனர். நேற்று மாலை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். கோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 8:00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு கார் மூலம் 9:30 மணிக்கு ஆண்டாள் கோயிலுக்கு சிவராஜ் சிங் சவுகான் வருகிறார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்கப்படுகிறது. தமிழக முதல்வர்களாக பலர் இருந்த நிலையில் பன்னீர்செல்வத்தை தவிர, வேறு எந்த முதல்வர்களும் இதுவரை ஆண்டாள் கோவிலுக்கு வரவில்லை. வெளி மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் ஆண்டாளை தரிசிக்க வருவது இதுவே முதல் முறையாகும்.