பதிவு செய்த நாள்
26
நவ
2021
04:11
பெரம்பலுார்: அரியலுார் அருகே, டீக்கடையில் சாக்குமூட்டையில் இருந்த சிறிய அளவிலான 5 சுவாமி சிலைகள் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டன.
அரியலுார் மாவட்டம், கல்லாத்துார் தண்டலை கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் அருகில் டீக்கடை நடத்தி வருபவர் வேல்முருகன்,38, இவர், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வியாபாரம் முடிந்து கடையை பூட்ட முயன்ற போது, அங்குள்ள ஒரு இருக்கையில் கிடந்த பையை பிரித்து பார்த்தபோது, அதில், சிறிய அளவில் செம்பு உலோகத்திலான 5 சுவாமி சிலைகள், ஒரு துாபக்கால் இருந்து தெரியவந்தது.
இதுகுறித்து, வேல்முருகன் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் 12 சென்டி மீட்டர் உயரமுள்ள கருடபகவான் சிலை, அதே அளவில் உள்ள அம்மன் சிலை, 8 சென்டி மீட்டர் உயரமுள்ள பெருமாள் சிலை, 6 சென்டி மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலை, 5 சென்டி மீட்டர் உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை என்பதும், ஒரு துரபக்கால் என்பதும் தெரியவந்தது. தகவலறிந்த, திருச்சி சிலை தடுப்பு தனிப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., ராஜாராம், மீட்கப்பட்ட சிலைகளை கருவூலத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி, அனைத்து சிலைகளும் ஜெயங்கொண்டம் கருவூலத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து, ஜெயங்கொண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.