பதிவு செய்த நாள்
26
நவ
2021
04:11
திருக்கழுக்குன்றம்-திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த குளத்தை அசுத்தப்படுத்துவோர் மீது, போலீஸ் நடவடிக்கை எடுப்பதாக, கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின், வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.பக்தர்களிடம் பிரசித்தி பெற்ற இக்கோவிலில், புனித தீர்த்தமான சங்குதீர்த்த குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, புனித சங்கு தோன்றுகிறது. கடந்த 2011ல் தோன்றிய நிலையில், அடுத்து எப்போதும் தோன்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்தில் லட்சதீப உற்சவ விழா நடத்தப்படுகிறது.இத்தகைய குளத்தில், கொடிகள் படர்ந்து சூழ்ந்தது. துணி துவைத்து, நார் மட்டை ஊறவைத்து, சோப்பு பயன்படுத்துவது என, குளம் அசுத்தப்படுத்தப்படுகிறது. குப்பை வீசி, மது அருந்திய பாட்டில் பிளாஸ்டிக் கப் ஆகியவை வீசப்படுகின்றன.இரு வாரங்களுக்கு முன், சிவ பக்தர்கள், உழவார பணியாக குளத்தை துாய்மைப்படுத்தினர். இதையடுத்து கடந்த வாரம் பெய்த மழை நீர், குளத்தை நிரப்பியுள்ளது.இந்நிலையில், குளத்தின் புனிதம் கெடுக்கும் வகையில் செயல்படுவோர் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.