திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்தக்குளம் (திருக்குளம்) சுற்றுச்சுவர்கள் தொடர்ந்து இடிந்து விழுவதால் பாதுகாப்பு கருதி குளத்தில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
திருக்குளத்தின் உள்பகுதியில் கற்களால் சுவர் கட்டப்பட்டு இருந்தது. ஒரு மூலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுவர் இடிந்து விழுந்தது. சில நாட்களுக்கு முன்பு இரண்டு மூலைகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. நேற்றும் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. ஸ்தபதிகள், பொறியாளர்கள் நேற்று திருக்குளத்தை ஆய்வு மேற்கொண்டனர். கோயில் துணை கமிஷனர் ராமசாமி: ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்த பகுதியை சீரமைக்க ரூ.23 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்து அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழையால் திருக்குளம் நிறைந்துள்ளது. மேலும் சுவர்கள் இடிந்து விழுந்ததால் மக்கள், பக்தர்கள் மற்றும் திருக்குளத்தின் பாதுகாப்பு கருதி ஸ்தபதிகள், பொறியாளர்களின் ஆலோசனைப் படி முதல் கட்டமாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பின்பு சேதமடைந்த பகுதிகளில் மணல் மூடைகள் அடுக்கி, மேலும் சேதம் ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைக்காலம் முடிந்த பின்பு கமிஷனர் உத்தரவு பெற்று திருக்குளத்தின் உட்பகுதிகள் முழுமையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். என்றார்.