பதிவு செய்த நாள்
07
டிச
2021
12:12
மேட்டுப்பாளையம்: மிகவும் பழமை வாய்ந்த, சுப்ரமணிய சுவாமி கோவில், திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என, பக்தர்கள் ஆவலோடு உள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில், பழைய நகராட்சி அலுவலகம் அருகில், பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்த மண்டபங்கள், சுவர்கள் இடியும் நிலையில் இருந்தது. அதனால், 2015 ம் ஆண்டு கோவில் இடிக்கப்பட்டு புதிதாக, திருப்பணிகள் துவங்கின. முருகர் மூலவர் சன்னதி, சிவன், அம்பாள், நவகிரக ஆகிய சன்னதிகளும், மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம், மணி மண்டபம், ராஜ கோபுரம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்து, ஒரு ஆண்டுக்கும் மேலாகியும், கும்பாபிஷேகம் நடைபெறாமல், உள்ளது. எப்போது கும்பாபிஷேகம் நடைபெறும் என, பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில்," சுப்ரமணிய சுவாமி கோவிலில், அனைத்து திருப்பணிகளும் நடந்து முடிந்துள்ளன. புதிதாக கொடிமரம், தீபஸ்தம்பம் அமைக்க, வரைபடம் அனுமதிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கொடிமரமும், தீபஸ்தம்பம் அமைக்கப்படும். அதன் பின்பு கும்பாபிஷேகம் தேதி முடிவு செய்யப்படும்," என்றார்.