பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
தென்காசி : குத்துக்கல்வலசை அழகுநாச்சியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடந்தது. தென்காசி அருகே குத்துக்கல்வலசை நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அழகுநாச்சியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. அன்று காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் ஐந்தாம் நாளன்று காலையில் பால்குடம் ஊர்வலம், செண்டா மேளம், நையாண்டி மேளம், வில்லிசை கச்சேரி நடந்தது. மாலையில் குற்றாலத்திலிருந்து புனிதநீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு முளைப்பாரி ஊர்வலம், கரகாட்டம், சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. நள்ளிரவில் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு அம்பாள் எழுந்தருளினார். வான வேடிக்கை, நையாண்டி மேள கச்சேரியுடன் தேரோட்டம் துவங்கியது. திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி தேர் நேற்று காலை 9 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. சிறப்பு தீபாராதனை, வில்லிசை கச்சேரி, நேர்ச்சைகள் நிறைவேற்றல் நடந்தது. ஏற்பாடுகளை நாட்டாண்மை முருகேசன் தலைமையில் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி இன்ஸ்பெக்டர் திருப்பதி மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.