பதிவு செய்த நாள்
17
டிச
2021
02:12
சென்னை: மார்கழி முதல் நாளான நேற்று, தினமலர் நாளிதழில் இடம் பெற்றிருந்த, திருஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகத்துக்கு, ஓவியர் பத்மவாசனின் ஓவியத்திற்கும், விளக்கத்திற்கும் வாசகர்களிடையே பலமான வரவேற்பு கிடைத்துள்ளது. தினமலர் வாசகர்களில் ஒருவரும், ஓவியருமான, 96 வயது பார்வதி பாட்டி, இது தன் வாழ்நாளில் வாசிக்கவும், பார்க்கவும் கிடைத்த பொக்கிஷம் என, மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
திருஞான சம்பந்தர் மதுரை செல்ல இருந்த போது, அவரது பக்தர்கள், அப்போதைய கோள்களின் சூழ்நிலை சரியில்லை எனக்கூடு பயணத்தை ஒத்திப்போட கேட்டுக் கொண்டனர். ஆனால் “சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை, நாளும் கோளும் என்ன செய்து விடும். அவை நன்மையே பயக்கும்,” என்று கூறி, திருஞான சம்பந்தர் பாடிய 11 பாடல்களின் தொகுப்பே, கோளறு பதிகமாகும். இந்தப் பதிகத்தைப் படித்தால், கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது, சைவ சமயத்தாருக்கு, ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி.இன்றும் ஏதாவது முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன், இந்தப் பதிகத்தை முழுதாகவோ, முதல் பாடலை மட்டுமோ சொல்லி செல்லும் வழக்கம் பலரிடம் உண்டு.
இதனைப் பற்றி, முழு விளக்கத்துடன் அருமையான ஒவியத்துடன் வந்துள்ள கோளறு பதிகம் பற்றி, சென்னை, நங்கநல்லுாரில் வசிக்கும் 96 வயது பார்வதி பாட்டி கூறியதாவது:ஓவியம் சிறப்பாக வந்துள்ளது. விளக்கம் எளிமையாக உள்ளது. மீதமுள்ள பத்து பதிகத்தை படிக்கவும், அது பற்றிய ஓவியத்தைக் காணவும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.நடமாட முடியாத பார்வதி பாட்டியின் ஒரே பொழுது போக்கு ஓவியம் வரைவதுதான். பென்சிலின் துணை கொண்டு, சாமி படங்கள் மட்டும் வரைவார்.இதுவரை, 3,௦௦௦த்திற்கும் அதிகமான ஓவியங்கள் வரைந்துள்ளார்.