பதிவு செய்த நாள்
17
டிச
2021
04:12
புதுச்சேரி: வராக அவதாரத்தின்போது பெருமாள் பூமி பிராட்டிக்கு உபதேசித்ததை தான், பூமி பிராட்டியின் அவதாரமான ஆண்டாள், திருப்பாவையிலும் உபதேசித்துள்ளார் என, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்தார்.
புதுச்சேரி காந்தி வீதி, வரதராஜ பெருமாள் கோவிலில் மார்க்கழி மாதத்தையொட்டி, 16ம் தேதி முதல் ஜனவரி 12ம் தேதி வரை திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு நடக்கின்றது.தினமும் காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவாற்றுகிறார். நேற்றைய முதல் நாள் சொற்பொழிவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நுால்; 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நுால்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள்.வராக அவதாரத்தின்போது பெருமாள் பூமி பிராட்டிக்கு உபதேசித்ததை தான், பூமி பிராட்டியின் அவதாரமான ஆண்டாள், திருப்பாவையிலும் நமக்கு உபதேசித்துள்ளார். இறைவனின் திருநாமத்தை வாய்விட்டு நாம உச்சாரணம் செய்ய வேண்டும்.இறைவனின் திருவடிகளில் மலரிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். இறைவனிடம் ஆத்ம சமர்பணம் செய்ய வேண்டும் என்பதே அவை. இதேபோன்று தான் திருப்பாவையின் முதல் 10 பாசுரங்கள் பெருமாளின் பேர் பாடு பற்றி வலியுறுத்துகின்றது. இரண்டாவது பத்து பாசுரங்கள் இறைவனின் திருவடிகளில் மலர்களையிட்டு அர்ச்சனை செய்வதை உபதேசிக்கின்றது. மூன்றாவது பத்து பாசுரங்கள் இறைவனின் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் செய்வதை தான் உபதேசிக்கின்றது.இதேபோல் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் விளக்கமாகவும், அதாவது அகார, உகார, மகார விளக்கமாகவும் திருப்பாவை உள்ளது. திருப்பாவையின் முதல் பாசுரத்தில் உயிர்நிலை, இறைநிலை, நெறிநிலை, தடைநிலை, வாழ்வு நிலை என்று வைஷ்ணவம் உணர்ந்தும் ஐந்து அடிப்படை பேருண்மைகள் திருப்பாவையின் உள்ளுரை பொருளாக பொதிந்துள்ளது.இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருப்பாவையை மார்கழியில் பாடி, சரணமடைந்தால், இறைவனின் திருவருளை பெறலாம். இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.