பதிவு செய்த நாள்
18
டிச
2021
11:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தில் தேர் திருவிழா நடத்த அனுமதியில்லை என ஆர்.டி.ஓ., கூறினார்.கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 11 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாளை 19ம் தேதி தேர் வீதியுலா, 20ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.கொரோனா பரவல் காரணமாக தேர்திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இந்நிலையில், மேற்கூரை பிரித்து தேர் கட்டும் பணி நேற்று துவங்கியது. தேர் திருவிழா நடக்கும் என தீட்சிதர்கள் சார்பில் கூறப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை சிதம்பரம் ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் தீட்சிதர்கள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், நகராட்சி கமிஷனர் அஜிதாபர்வின், தாசில்தார் ஆனந்த், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் தீட்சிதர்கள் சார்பில் மூன்று பேர் பங்கேற்றனர். ஆர்.டி.ஓ., ரவி பேசுகையில், தேர் வீதியுலாவிற்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. கோவிலுக்கு வரும் பக்தர்களை சமூக இடைவெளியோடு தரிசிக்க அனுமதிக்க வேண்டும். முன்பே தகவல் தெரிவித்தும், தேர் கட்டும் பணியை செய்கிறீர்கள் என தீட்சிதர்களிடம் கடுமையாக பேசினார். இதையடுத்து தீட்சிதர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். சிதம்பரம் நடராஜர் கோவில் தேர், தரிசன விழா நடக்காது என்பது உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.