பாகிஸ்தான் தகர்த்த காளி கோவில் வங்கதேசத்தில் மீண்டும் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2021 12:12
டாக்கா:வங்கதேசம் வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 1971ல் பாகிஸ்தான் ராணுவத்தால் தகர்க்கப்பட்ட காளி கோவிலை திறந்து வைத்தார். கடந்த 1971ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடானது. இதற்கு இந்திய ராணுவம் வங்கதேசத்துக்கு உதவியது. இதன் 50வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க, அந்நாட்டு அதிபர் அப்துல் ஹமீது, நம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையயேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வங்கதேசம் வந்துள்ளார். நேற்று நடந்த அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் 1971ல் பாகிஸ்தான் ராணுவத்தால் தகர்க்கப்பட்ட காளி கோவிலை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். பின், ராம்நாத் கோவிந்தும், அவரது மனைவி சவீதாவும் காளிதேவியை தரிசித்தனர். திறப்பு விழாவில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:இந்த காளி கோவிலை திறந்து வைத்ததை கவுரவமாக கருதுகிறேன். காளியின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்துள்ளதாக பார்க்கிறேன். இந்தியா மற்றும் வங்கதேச மக்களுக்கு இடையிலே உள்ள கலாசார மற்றும் ஆன்மிக பிணைப்புகளின் ஒரு சின்னமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். பாக்., ராணுவத்தினர் இந்த காளி கோவிலை சூறையாடியதோடு நிற்காமல், தீயிட்டும் எரித்தனர். அந்த சம்பவத்தின்போது அப்பகுதியில் வசித்த மக்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவிலின் புனரமைப்பு பணிகளுக்கு இந்திய அரசு நிதியுதவியும் அளித்துள்ளது.
உதவி நல்கும் இந்தியா: இந்திய வம்சாவளியினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:இந்திய மக்களின் இதயங்களில் வங்கதேசத்திற்கு என தனி இடம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவு குறித்து அனைவரும் அறிவோம். வலுவான பொருளாதாரம் உடைய நாடாக வங்கதேசம் உருவாவதற்கு, அனைத்து உதவிகளையும் இந்தியா தொடர்ந்து செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.