பதிவு செய்த நாள்
18
டிச
2021
12:12
இன்றைய கடினமான சூழலில், அருள்நிறை திருஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகம் பாடல்களைப் பொருள் உணர்ந்து படித்தால், துன்பங்கள் நீங்கும், துயர் விலகும், நன்மைபயக்கும். பதிகத்தின்11 பாடலுக்கும் ஓவியர் பத்மவாசன் விளக்கமும் சித்திரமும் எழுதியுள்ளார்.
பாடல்: 3
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொள்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதுார்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பொருள்: பார்க்கப் பார்க்கஅழகு வளர்ந்து கொண்டே இருக்கிறதும், மின்னும் பவளம் போன்ற சிவந்தமேனியும், அதில் ஒளிரும் திருநீற்றை அணிந்தவரும், உமையம்மையுடன் வெள்ளை எருது மேல் ஏறி வருபவரும், வாசனையுடனான கொன்றைப் பூக்களையும், பிறையையும் திருமுடிமேல் அணிந்தவருமான சிவபெருமானார், என் உள்ளப் பெருங்கோயிலில் புகுந்து அமர்ந்து கொண்ட அதனால் மஹாலக்ஷ்மி தேவி, சரஸ்வதிதேவி, வெற்றி தரும் தேவியான துர்க்கை, பூமாதேவி. எட்டுத்திக்கு அதிபதிகளான இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசான்யன் போன்றோரும், இவர்கள் தவிர, இருக்கும் மற்றபல தெய்வங்களும், ஆயுள், ஆரோக்கியம், திரவியம் போன்ற அருஞ்செல்வங்களையே அருள்வதோடு, அவர்களே பெருஞ்செல்வங்களாக அடியார்களுடன் இருந்து அவர்களுக்கு நல்லன, நல்லன மிகுந்த நல்லனவே செய்வர்.