ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தீர்த்தவாரி: நம்மாழ்வாருக்கு மோட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2021 11:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு நாளான நேற்று சந்திரபுஷ்கரணியில் தீர்த்த பேரர் தீர்த்தவாரி கண்டருளினார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து உற்ஸவமும் 14ம் தேதி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பும் நடைபெற்றது. தொடர்ந்து ராப்பத்து உற்ஸவ நாட்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ராப்பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று காலை நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டையுடன் திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி வந்தடைந்தார். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நம் பெருமாள் முன்னிலையில் தீர்த்த பேரர் சந்திர புஷ்க்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். தீர்த்தவாரிக்கு பின் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து இரவு 8 மணி வரை திரளான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். இன்று நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.