தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தர்மபுரம் ஆதீனம் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2021 10:12
மயிலாடுதுறை : ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தர்மபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் தனுர் மாத வழிபாடு நடத்தினார்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முற்கால சோழ மன்னர்களின் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட் சோழ மன்னனால் அமைக்கப்பட்ட கோவிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றியீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்த தலம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தனுர் மாதமான இன்று தர்மபுரும் ஆதீன 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு வழிபாடு நடத்தினார். கோவிலுக்கு வந்த குருமகாசந்நிதானம் விநாயகர், சுவாமி, அம்பாள் சன்னதிகளில் தனுர் மாத சிறப்பு வழிபாடு நடத்தினர். சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தி வைத்தனர். குருமகா சன்னிதானத்துடன் ஆதீன தம்பிரான்கள் உடன் இருந்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து குருவருளையும், திருவருளையும் பெற்றனர்.