ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமி ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2021 12:12
திருவாரூர் : ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி கோவிலில் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தின் ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீ மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆஞ்சநேயருக்கு வலதுபுறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், இடதுபுறம் ஸ்ரீ கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேயர் சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர்.
இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள 33அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி, மங்களம் உண்டாகும். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நேற்று ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஷகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யாபினவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகளின் ஜெயந்தி விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்று வரை சத சண்டி யாகம் நடத்தப்பட்டு காலை 11 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹாஸ்வாமிகள் முன்னிலையில் பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விஸ்வரூப ஆஞ்சநேயர் லட்சுமி நரசிம்மர் கோதண்ட ராமர் சீதாதேவி லட்சுமணர் பக்த ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரசாதங்களை சிவாச்சாரியார்கள் மகா சுவாமிகளிடம் வழங்கினர். தொடர்ந்து குரு மூர்த்தி தலைமையில் திருவோணமங்கலம் கிராம மக்கள் வரிசை எடுத்து வந்து மகா சுவாமிகளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேய பகவானையும், மகா சுவாமிகளையும் தரிசனம் செய்து குருவருளையும், திருவருளையும் பெற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்ம அதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர் ஆகியோர் தலைமையில் கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து ஞானபுரீ ஸ்ரீ சித்திர கூட சேத்திரம் சங்கடஹர ஸ்ரீ மங்கல மாருதி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் மார்கழி மாத அமாவாசை மூல நட்சத்திரம் கூடிய ஜனவரி 2ம் தேதி ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மகோத்சவம் நடைபெற உள்ளது. ஹனுமன் ஜெயந்தி மகோற்சவத்தை முன்னிட்டு இன்று 26ம் தேதி முதல் 30ஆம் தேதிவரை ருத்ர ஹோமம் நடைபெறுகிறது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஜனவரி 1, 2 ஆம் தேதிகளில் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.