பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
12:07
கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ரூ.5 கோடி செலவில் இரட்டை ராஜகோபுரம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஆனந்தன் ரயில் மூலம் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ரூ.ஒரு கோடியே 5 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் கும்பாபிஷேக திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ரூ.ஒரு கோடியே 5 லட்சம் செலவில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள், அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.90 லட்சம் செலவில் திருப்பணிகள் உபயதாரர்கள் மூலமும், ரூ.15 லட்சம் செலவில் திருப்பணிகள் அரசின் மூலமும் செய்யப்படும்.
ரூ.5 கோடி செலவில் 9 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் 131 அரை அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. கோயிலின் கிழக்கு வாசலில் 3 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் 30 அடி உயரத்தில் அமைக்கப்படும்.
ராஜகோபுரம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் ராஜகோபுரம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும். தமிழகத்தில் 298 திருக்கோயில் தேர்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 27 தேர் பணிகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு தேரும் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. தேர்கள் செய்யும் ஸ்தபதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், அதற்கு தேவைப்படும் இலுப்பை மரங்கள் குறைவாக இருப்பதாலும் தேர்ப்பணிகள் காலதாமதாக நடந்து வருகிறது. தமிழகத்தில் ரூ.10லட்சம் வருவாய் உள்ள திருக்கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனம் விரைவில் நடைபெறும். முதற்கட்டமாக 114 கோயில்களில் அறங்காவலர்கள் குழு அமைக்கப்படும். இதற்கான உத்தரவினை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வெளியிடுவார். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விரைவில் அனைத்து கோயில்களுக்கும் இந்த வசதி செய்து தரப்படும். கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழனி, ஸ்ரீரங்கம், வடபழனி ஆகிய திருக்கோயில்களில் தலா ரூ.1.25 கோடி செலவில் சூரியஒளி மற்றும் காற்றின் மூலம் மின்சார வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், கடந்த முறை அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் 468 கோயில்களில் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், கடந்த கால தி.மு.க., ஆட்சியில் 2 கோயில்களில் மட்டுமே இந்த திட்டம் மட்டுமே விரிவுபடுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் 50 கோயில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 516 கோயில்களில் இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பழனி மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் நாள் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கழிப்பறைகள் உடனடியாக கட்ட உத்தரவிட்டார். மேலும் புதிதாக வணிக வளாகம் அமைய உள்ள இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். அமைச்சருடன் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன், தேவசம் போர்டு கூடுதல் ஆணையர் தனபால், குமரி மாவட்ட தேவசம் போர்டு இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் சுவாமிநாதன், முதுநிலை பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜீவானந்தம், பகவதியம்மன்கோயில் மேலாளர் சோனாச்சலம் ஆகியோர் உடன் சென்றனர்.