பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
12:07
நாகர்கோவில் : தமிழகம் முழுவதும் இந்த ஆண்டிற்குள் 1006 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் தெரிவித்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் நேற்று குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். கன்னியாகுமரி வந்த அவர் பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய பெருமாள் கோயில்களில் வழிபாடு நடத்தியதுடன் கோயில்களில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வந்த அவர் நாஞ்சில் அரங்கில் இந்து அறநிலையத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்., தலைவர் சாரதாமணி, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் தனபாலன், இணை ஆணையர்கள் ஞானசேகர், அன்புமணி, பி.ஆர்.ஓ., ஹரிராம், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். அப்போது குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பது, கோயில் நிலங்கள் பராமரிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் ஆனந்தன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; குமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோயில்களில் வருமானத்தை பெருக்கி அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பது, கோயில் நிலங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பனவற்றிற்கு முக்கியவத்துவம் கொடுத்து ஆந்த ஆய்வு நடத்தப்படுகிறது. தமிழக முதல்வராக ஜெ., ஆட்சிக்கு வந்தபிறகு இந்து கோயில்களை பராமரித்து குடமுழுக்கு செய்யப்பட்டு, கோயில்களின் சிறப்பான பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 1006 கோயில்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த ஆண்டும் அதே போல் 1006 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டு 490 கோயில்கள் உள்ளன. இவை 4 கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கோயில்களில் பணிகள் எவ்வாறு சிறப்பாக நடக்கவேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. இங்குள்ள கோயில்கள் மூலம் ஆண்டுக்கு 11 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலைய பெருமாள் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் ஆகிய கோயில்கள் அதிக வருமானம் பெறும் கோயில்களாக உள்ளன. இனிவரும் காலங்களில் கோயில் நிலங்களின் மூலம் வருமானம் அதிகம் கிடைக்கவும், சிறப்பாக செயல்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்து அறநிலையத்துறை கோயில்களின் அன்னதான திட்டத்திற்கு 7 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வைர அட்டை வழங்கப்படும். அவர்களின் குடும்பத்தில் 7 பேர் தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் வழிபடுவதற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டு மரியாதை செய்யப்படுவர். இதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரவேண்டும். இதைப்போல் 1 கோடி ரூபாய் கோயில்களுக்கு நன்கொடை வழங்குவோருக்கு பிளாட்டின அட்டை வழங்கப்படுகிறது. இந்த நன்கொடை கொடுப்பவர்களுக்கு கோயில்களில் சிறப்பு வரவேற்பு அளித்து தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே நன்கொடை கொடுக்க விரும்புவோர் தகவல் தெரிவிக்கலாம்.
கோயில்களில் பக்தர்களுக்கு தங்கும் வசதி சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட கோயில்களில் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காற்றாலைகள் மூலம் கோயில்களுக்க மின்வசதி செய்துகொடுப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. கோயில்களில் பிரசாதங்கள், மற்றும் வழிபாட்டு ஏற்பாடு விஷயங்களில் என்ன குறைபாடு இருந்தாலும் அதுபற்றி தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஆனந்தன் தெரிவித்தார்.
பன்னிரு சிவாலயங்களில் வருகிறது வழிகாட்டி குமரி மாவட்டத்தில் திருமலை மகாதேவர் கோயில், திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திகரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைகோடு, திருவிதாங்கோடு, திருப்பந்தகோடு, திருநட்டாலம் ஆகிய பன்னிரு சிவாலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த கோயில்களை இணைத்து எல்லா ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; குமரி மாவட்டத்தில் உள்ள பன்னிரு சிவாலயங்களுக்கும் செல்லும் வழியை குறிக்கும் வகையில் வழிகாட்டி வைக்கப்படும். மேலும் சுற்றுலா பயணிகள், மற்றும் மக்கள் எழிதாக கோயிலுக்கு செல்லும் வகையில் ரோட்டோரங்களில் முக்கிய பகுதிகளில் ஒவ்வொரு சிவாலயத்திற்கும் எத்தனை கிலோ மீட்டர், மற்றும் வழி போன்றவற்றை தெரியப்படுத்தும் வகையில் போர்டுகள் அமைக்கப்படும் என்றார். மேலும் இவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.