பதிவு செய்த நாள்
28
டிச
2021
03:12
தர்மபுரி: ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பிலுள்ள கோவிலோ, கோவில் சிலைகளோ இல்லை. அதிகாரிகளும் அதை கண்டும் காணாமல் உள்ளனர், என, திருதொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தர்மபுரி மாவட்டம், அரக்காசனஹள்ளியில் கோவில் சிலைகள் இல்லை என, அப்பகுதி மக்களின் புகார்படி, நேற்று அவர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு, பெருமாள் கோவிலே இல்லாததும், அருகே மாரியம்மன் கோவில் சிதிலமடைந்து சிலையின்றி இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரக்காசனஹள்ளியில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெருமாள், மாரியம்மன் கோவிலுக்கு, 20 ஏக்கருக்கு மேல், மானிய நிலங்கள் உள்ளன. இதில், பெருமாள் கோவில் கட்டடமே இல்லாத நிலையிலும், மாரியம்மன் கோவிலுக்கு சிதிலமடைந்த சிறிய கட்டடம் மட்டும் உள்ளது. இங்கிருந்த சிலைகள் மாயமாகி உள்ளன. பெருமாள் கோவில் சீரமைப்புக்காக, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், ஓராண்டுக்கு நிதி ஒதுக்கினர். ஆனால், இதுவரை கோவில் கட்டடம் இல்லாமல் உள்ளது. சிலை மாயமானது, கோவில் சீரமைப்பு செய்யாததை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். கோவில்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, முறைகேடுகளுக்கு துணை சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.