பதிவு செய்த நாள்
31
டிச
2021
03:12
புதுச்சேரி-அடியவர் சேவையை, உபதேசத்தால் விவரிக்க முடியாது என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்தார்.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி கடந்த 16ம் தேதி முதல் திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு துவங்கியது.ஜனவரி 12ம் தேதி வரை தினமும் காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ரன் சொற்பொழிவாற்றுகிறார். நேற்றைய சொற்பொழிவில் அவர் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவையின் 15வது பாசுரம், கோபியரை துயிலெழுப்பும் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களில் இது கடைசி பாசுரமாகும்.இந்த பாசுரத்தை திருப்பாவையின் திருப்பாவை என்று போற்றுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், பாசுரத்தில் உள்ள நானே தான் ஆயிடுக என்ற சொற்கள் உணர்த்தும் ஆழ்ந்த தத்துவம். இதற்கு ஆழ்ந்த உட்பொருளும் உள்ளது.எளிமையாக சொன்னால், இல்லாத குற்றத்தை பொய்யாக ஒருவர் நம் மீது சுமத்தும்போது கூட, அதை மறுக்காமல் நமது குற்றமென்று இசைவதே ஒரு வைணவனின் குணமாகும் என்று உணர்த்தப்படுகிறது.இந்த பாசுரம் உணர்த்தும் அடியவர் சேவை என்பது, உபதேசத்தால் விவரிக்க முடியாதது. அதை கடைபிடிப்பவர்களாலேயே உணர முடியும். அதனால் தான் பாசுரத்தை, அடியவர் சேவை பற்றிய அறிவுரையாக கூறாமல், சம்பாஷணை வடிவில் சொல்லி, அடியவர் சேவையின் சிறப்பினை ஆண்டாள் குறிப்பில் உணர்த்தி உள்ளார்.அடியார்க்கு அடியாராக இருப்பதில் உள்ள பெருஞ்சிறப்பை, நம்மாழ்வார் அவருக்கே உரித்தான பக்தியோடு அருளியுள்ள பாசுரங்களில் ஒன்றில், அடியார் என்பதை ஏழு முறை சொல்லியுள்ளது, சப்த பர்வ தாஸ்யத்வம் எனப்படுகிறது.அதாவது, ஏழு பிறப்புகளிலும் வைணவ அடியார்களுக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை வரமாக பரமனிடம் பெற வேண்டும் என்பது இதனுடைய உள்ளுறை பொருள்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.