பதிவு செய்த நாள்
02
ஜன
2022
06:01
பனசங்கரி:பிரசித்தி பெற்ற பனசங்கரி கோவிவில், புதிதாக கட்டப்பட்ட அன்னதானம் பவனில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது துவங்கப்பட்டது. பெங்களூரின் பனசங்கரி கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றது. கோவிலின் நுாற்றாண்டை முன்னிட்டு 2015ன் மே மாதம், இக்கோவிலில் அன்னதானம் துவங்கியது. அன்று முதல் தினமும் பக்தர்களுக்கு, பிரசாதமாக அன்னதானம் வழங்கப்படுகிறது.அன்னதானம் துவங்கிய பின், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆயிரக்கணக்கானோருக்கு சமையல் செய்யவும், பொருட்களை சேகரித்து வைக்கவும் அறை தேவைப்பட்டது.எட்டு கோடி ரூபாய் செலவில், அன்னதானம் பவன் கட்டும் பணிகள், 2016ல் துவங்கியது. பணிகள் முடிந்தது என்றாலும், கொரோனாவால் திறக்க முடியவில்லை. நேற்று முன் தினம் அன்னதானம் பவன் திறக்கப்பட்டது. முதல் நாளே 5,000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, அன்னதானம் செய்யப்பட்டது. பனசங்கரி கோவில் நிர்வாக அதிகாரி லட்சுமி கூறியதாவது:அறநிலையத்துறை சார்பில், அன்னதானம் துவங்கிய பெங்களூரின் முதல் கோவில் இது. முதல் நாள் என்பதால், அன்னதான பவன் முன்பகுதியின், விசாலமான வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் நாட்களில் கட்டடத்தின் உட்புறம் பிரசாதம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.