அன்னூர்: மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர், ஓதிமலை ரோட்டில் உள்ள பழமையான பெரியம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசையான நேற்று காலை 9:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 10:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. பெரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னூர், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சின்ன அம்மன் கோவிலில், காலை 7:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 8:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது.
அன்னூர், தென்னம்பாளையம் ரோடு, மாரியம்மன் கோவில் அங்காளம்மன் கோவில்களிலும் அமாவாசையை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது, அன்னூர் வட்டாரத்தில் கதவுகரை, எல்லப்பாளையம், கரியாம்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் அம்மன் கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.