பதிவு செய்த நாள்
05
ஜன
2022
05:01
கடவுள் என்றால் அவர் எல்லோருக்கும் சொந்தம்தான். அவரை நாம், ‘என் கடவுள், உன் கடவுள்’ என்று கூறு போடுவதால் சண்டைதான் மிஞ்சும். பக்தி என்பது ஒன்று சேர்க்கத்தானே தவிர பிரிக்க அல்ல. அவரவர் தங்கள் இஷ்ட தெய்வத்தை ‘எங்கள் கடவுள்’ என்று சொந்தம் கொண்டாடலாம். அது அன்பின் வெளிப்பாடு. ஆனால் தனக்கு ஒரு கடவுள் இஷ்டம் என்பதால் மற்ற கடவுளரை மட்டமாகவோ, மரியாதை குறைவாகவோ எண்ணுவது தவறு.
முருகனை ‘தமிழ்க்கடவுள்’ என்று தமிழ் உலகம் உரிமை கொண்டாடுகிறது. ஆனால் அவர் தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் மட்டும் சொந்தமானவரா? வடதேசத்தில் குமார், கார்த்திக் என்று இந்த குமரனையே அன்புடன் கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதும் அவரை வழிபடுகிறார்கள்.
ஆதிசங்கரர் அறுசமயம் என ஆறு தெய்வ வடிவங்களை முதலாகக் கொண்டு வழிபடும் முறையை செப்பனிட்டார். அதில் ‘கவுமாரம்’ என்ற குமரக்கடவுள் வழிபாடும் ஒன்று.
கந்தன் என்கிற முருக பக்தியும், பக்தர்களும் உலகில் பலவாறாக பரவியுள்ளதாக சான்று மூலம் காட்டுகிறார் காஞ்சி மஹாபெரியவர். உதாரணத்திற்கு அலெக்ஸாண்டர், சிக்கந்தர் என்ற பெயர்கள் ஸ்கந்த நாமத்தின் திரிபுதான் என்பார். ‘ஸ்கந்த்’ என்பதன் பொருள் ‘வெளிப்படுவது’. சிவனின் நெற்றிக்கண் பொறியாக சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு அவதரித்ததால் ‘ஸ்கந்தன்’, ‘கந்தன்’ என்று பெயர். சில வார்த்தைகளை சில பகுதிகளில் சற்று வித்தியாசமாக உச்சரிப்பது இயல்பு.
சென்னையில் சிலர் மொழியில் ‘ஸ்கூல்’ என்பதை ‘ஸ்ஸ்கூல்’ என்பார்கள். அதுபோல ‘ஸ்கந்தரை’ ‘ஸ்ஸ்கந்தர்’ என்றும் சிக்கந்தர் என்றும், செமிடிக் மொழியில் ‘அல்’ சேர்க்கும் வழக்கப்படி ‘அல் ஸ்ஸ்கந்தர்’ ஆகி அதுவே அலெக்ஸாண்டர் ஆனது என்றும், ஸ்கந்த வழிபாடு உடையவர்கள் வாழ்ந்த பகுதியே ஸ்காண்டியா, ஸ்காண்டிநேவியா என உள்ளதாக விளக்குகிறார். தமிழ்க் கடவுள் என உரிமை பாராட்டப்படுபவர் உலகம் முழுவதும் பலவிதமாக பரவியுள்ளார் என பெருமிதம் கொள்கிறார் மஹாபெரியவர்.
1961ம் வருடம் காரைக்குடியில் முகாமிட்டிருந்த பெரியவர் ‘காஷ்ட மவுனம்’ இருந்தார். அதாவது பேசாமல், செய்தி பரிமாறாமல் கட்டை போல் இருக்கும் நிலையில் இருந்தார். அப்போது சங்கீத சக்ரவர்த்தி அரியக்குடி ராமாநுஜ அய்யங்கார் அங்கு வந்திருப்பதை கேட்டு அவரை வந்து தன்னை பார்க்கும்படி தெரிவித்தார். அவரும் தனக்கு பெரியவா என்ன கைங்கர்யம் செய்ய ஆணையிடுவார் எனக் காத்திருந்தார். பெரியவரோ சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பாடல்களில் சிறந்த ‘ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே’ என்ற காம்போதி ராக பாடலை பாடிக் கேட்க விரும்புவதாகக் கூறினார். இதை சற்றும் எதிர்பாராத அரியக்குடி உணர்ச்சிவசப்பட்டவராக பாடிக் காட்ட அதற்கு வார்த்தைக்கு வார்த்தை பொருள் கூறி விளக்கியது பெரியவரின் இசைப்புலமை, ஆழ்ந்த ஞானத்தைக் காட்டுகிறது.
ராகத்தின் பெயராகிய காம்போதியில் இருந்து தெளிவாக விளக்கம் தர மஹாபெரியவரால் மட்டுமே இயலும். ‘‘காம்போதின்னு சொன்னாலும் காம்போஜ தேசம். தற்காலத்தில் கம்போடியா எனும் கிழக்காசிய நாடுகளில் ஒரு இடம்னு சொல்கிறோம். ஆனால் மகாகவி காளிதாசர் அகண்ட பாரதத்தின் வடகோடியில் சிந்து நதியை தாண்டி இண்டுகுஷ் பிரதேசத்தில் காம்போஜம்னு ஒரு தேசம் இருந்ததாகவும், ரகு என்னும் அயோத்தி ராஜா அதையும் ஜெயித்ததாகவும் ‘ரகுவம்ச’ காவியத்தில் சொல்கிறார்.
சங்கீதத்தில் பல இடங்களில் இருந்து கொடுக்கல், வாங்கல் சகஜம். அப்படி காம்போஜத்தில் பிரபலமாக இருந்த ராகம் உலகம் முழுவதும் பரவியது. அந்தப் பெயரிலேயே அந்த ராகம் உள்ளது என்பதில் இருந்து பாடலுக்கு அணுஅணுவாக ரசித்து பொருள் கூறுவதை அனைவரும் படித்து ரசிக்க வேண்டும்.
பாடலின் தொடக்கமே ‘ஸ்ரீசுப்ரம்மண்யாய நமஸ்தே’ என்று உள்ளது. பிரம்மம் என்பதற்கு இரு விதமான பொருள் உண்டு. ஒன்று ‘முழுமுதற்கடவுள்’ என்பது. மற்றது ‘வேதம்’ என்பதாகும். பிரம்மம் என்ற வேதத்தை ஓதி அது சொன்னபடி வேள்வி முதலான கடமைகளை செய்பவர்களே ப்ரம்மண்யர், பிராம்மணர் எனப்படுபவர்கள். வேதக் கடமைகளில் தலையாயது வேள்வி முதலான அக்னி வழிபாடு. முருகனும் அந்த அக்னியில் ஆறு பொறிகளாக வெளிப்பட்டவர்தானே. அதனால் அவரே ப்ரம்மண்யர், சுப்ரம்மண்யர். இதை உறுதிசெய்வது போல் தமிழிலுள்ள பழமையான பக்தி நுால் திருமுருகாற்றுப்படையில் ஆறுமுகனின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதமான அருள் செய்வதாக சொல்லும்போது
... ஒருமுகம் மந்திரவிதியின் மரபுளி வழாஅது
அந்தணர் வேள்வியோர்க்கும்மே
என்று நக்கீரர் சொல்கிறார். ஆறுமுகனின் ஒருமுகம் மந்திரங்களை சொல்லி மரபு மாறாமல் வேள்வி செய்வதற்கு அருள்வதாக தெரிகிறது. அதனால் அவர் சுப்ரமண்யர்.
பிறகு அநுபல்லவியில் ‘பூசுராதி சமஸ்த ஜன பூஜிதாப்ஜ சரணாய’ என்று, யாகங்கள் மூலம் தேவர்களான சுரர்களை பூமிக்கு வரவழைப்பதால் அந்தணர்களை பூசுரர்கள் என்பர். அப்படிப்பட்ட அந்தணர் முதல் அனைவரும் பூஜிக்கும் பாதத்தாமரைகளை உடையவர் முருகன் என்பதிலிருந்து அவர் அனைவருக்கும் பொதுவான கடவுள் என்பது தெளிவாகிறது. அவரது மனைவியர் இருவரில் ஒருவர் சுரமகள் என்னும் தெய்வானை, மற்றொருவர் குறமகள் என்னும் வள்ளி என்பதில் இருந்து நாம் அனைவரும் அவரது முன் சமம் என்பது விளங்கும். அப்படிப்பட்ட பொதுக்கடவுளான முருகனை ஒற்றுமையாக அனைவரும் வழிபட்டு அருள் பெறுவோம்.