ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடவுளைத் தேடிப் புறப்பட்டனர். இதை கேள்விப்பட்ட பெரியவர் ஒருவர் கழுதையின் மீதேறி அவர்களைத் தேடிச் சென்றார். இளைஞர்களைக் கண்டதும் கழுதையை விட்டு இறங்கி, ‘‘கடவுளைத் தேடிப் புறப்பட்டுள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றிடையட்டும்" என வாழ்த்தினார். மீண்டும் கழுதை மீதேறி அவர்கள் செல்லும் வழியிலேயே போகத் தொடங்கினார். ஊருக்குத் திரும்பாமல் தங்களுக்கு முன்பு செல்வதைக் கண்டதும், ‘‘பெரியவரே! நீங்களும் எங்களுடன் வருகிறீர்களே... கடவுளைக் காண ஆசையா’’ என இளைஞர்கள் கேட்டனர். ‘‘என் கழுதையைத் தேடி வந்து கொண்டிருந்தேன். வழியில் உங்களைப் பார்த்ததால் வாழ்த்தினேன். மீண்டும் கழுதையைத் தேடிப் புறப்பட்டேன். அது வரை திரும்ப மாட்டேன்" என்றார். ‘‘கழுதை மீது அமர்ந்து கொண்டே கழுதையைத் தேடுகிறீரே’’ என சொல்லி சிரித்தனர். "ஏன் இப்படி கேலியாகச் சிரிக்கிறீர்கள்?" எனக் கேட்டார் பெரியவர். "கழுதையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். அருகிலேயே கழுதை இருக்கிறது. பின்னர் அதை தேடிப் போவதாகச் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது’’ எனக் கேட்டான் ஒருவன். "சிந்தித்தால் உங்களுக்கு சிரிப்பு வராது. கடவுளைத் தேடிச் செல்வதாகச் சொல்கிறீர்களே... உங்களுக்குள்ளேயே இருக்கும் ஒருவரை எங்கு தேடினாலும் அகப்பட வாய்ப்பில்லையே... வீணாக நீங்கள் ஏன் அலைய வேண்டும்’’ எனக் கேட்டார் பெரியவர். உண்மையை உணர்ந்த அவர்கள் பெரியவருடன் புறப்பட்டனர்.